கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம், வாரிய தலைவர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்க முடிவு


கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம், வாரிய தலைவர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்க முடிவு
x
தினத்தந்தி 26 March 2022 9:12 PM IST (Updated: 26 March 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

அமித்ஷா வருகிற 1-ந் தேதி துமகூருவுக்கு வருவதையொட்டி மந்திரிசபை விரிவாக்கம், வாரியங்களுக்கான தலைவர்களை நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு: அமித்ஷா வருகிற 1-ந் தேதி துமகூருவுக்கு வருவதையொட்டி மந்திரிசபை விரிவாக்கம், வாரியங்களுக்கான தலைவர்களை நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தல் குறித்து...

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து, கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவதற்காக பா.ஜனதா மேலிடம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 1-ந் தேதி துமகூருவுக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் துமகூரு சித்தகங்கா மடத்தில் நடைபெறும் சிவக்குமார சுவாமியின் 116-வது பிறந்தநாள் விழாவில் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் கர்நாடக கூட்டுறவு துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலும் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக மந்திரி சோமசேகர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், துமகூருவுக்கு வரும் அமித்ஷா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்தும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மந்திரிசபை விரிவாக்கம் பற்றி முடிவு

குறிப்பாக சட்டசபை தேர்தலுக்கு தயாராகுவதற்காக மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மந்திரிசபையை மாற்றியமைப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன், அமித்ஷா ஆலோசிக்க இருப்பதாகவும் தெரிகிறது. 

அதுபோல், வாரிய தலைவர்களுக்கான பதவிகளை நிரப்புவது குறித்தும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்பு தான் மந்திரிசபை விரிவாக்கம் பற்றி முடிவு செய்யப்படும் என்று பா.ஜனதா மேலிடம் அறிவித்திருந்தது.

இதனால் துமகூருவுக்கு வருகை தரும் அமித்ஷாவுடன், இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
ஏற்கனவே பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சட்டசபை தேர்தல் எதிர்கொள்ளப்படும் என்று கடந்த முறை கர்நாடகம் வந்திருந்த போது அமித்ஷா அறிவித்திருந்தார். அதனால் வருகிற 1-ந் தேதி துமகூருவுக்கு அமித்ஷா வந்த பின்பு கர்நாடக பா.ஜனதாவில் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முக்கிய முடிவு எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story