தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 March 2022 9:19 PM IST (Updated: 26 March 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தண்ணீர் பந்தல் அமைக்கப்படுமா?

கிருஷ்ணகிரி நகரில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம், ரவுண்டானா போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நகராட்சி சார்பாக ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்து பொது மக்களின் தண்ணீர் தாகம் தீர்க்க வேண்டும்.
-சந்திரன், கிருஷ்ணகிரி.
====
தாமதமாகும் ரெயில்வே மேம்பால பணி

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதியமான்கோட்டை ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த பணி தாமதமாகி வருவதால் இன்னும் முடிவடையவில்லை. இதனால் ரெயில்வே சாலையில் சென்று வந்த வாகனங்கள் மாற்று வழியில் சென்று வருகின்றன. இதனால் இந்த மாற்று சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன. எனவே அதியமான்கோட்டை மேம்பால பணியை விரைவாக முடித்து அதை போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், அதியமான்கோட்டை, தர்மபுரி.
===
பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட கிழக்கு பாவடியில்   3 கட்டிடங்களை கொண்ட அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு உட்கார போதுமானதாக இடம் இல்லாததால் அருகிலுள்ள கட்டிடத்திலும் மாணவர்களுக்கு பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி விளையாட்டு வசதிகளுடன் கூடிய கூடுதல் பள்ளிக்கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், கிழக்கு பாவடி, சேலம்.
===

சுகாதார நிலையம் சீரமைக்கப்படுமா? 

சேலம் ஆண்டிப்பட்டி பகுதியில் துணை சுகாதார நிலையம் உள்ளது. அந்த கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் விழுந்து சிமெண்டு கற்கள் பெயர்ந்து கீழே விழுகின்றன. இதனால் சுகாதார நிலையத்துக்கு வரும் மக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஏதாவது விபத்து ஏற்படும் முன் இந்த சுகாதார நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெ.மணிகண்டன், ஆண்டிப்பட்டி, சேலம்.
==
ஆபத்தான கிணறு 

சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி ஊராட்சி போயர் தெருவில் திறந்தவெளியில் பொதுகிணறு ஒன்று உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் இந்த கிணற்றை அடிக்கடி எட்டி பார்க்கின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்பு இந்த கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும்.
-சதீஷ்குமார், தேவியாக்குறிச்சி, சேலம்.
===
புதருக்குள் டிரான்ஸ்பார்மர் 

சேலம் தாதம்பட்டி மாரியம்மன் கோவில் ஏரி வீதி தனகோபால் தெருவில் தண்ணீர் தொட்டி, டிரான்ஸ்பார்மர் உள்ள பகுதியில் செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் 2 ஆண்டுகளாக குப்பைகள் அள்ளப்படாமல் இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் விஷப்பூச்சிகள் அதிகளவில் நடமாடுகின்றன. எனவே இங்கு துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது.  சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி அந்த பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும்.
-தனகோபால் தெரு மக்கள், தாதம்பட்டி, சேலம்.
===

Next Story