விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை; திருமணத்துக்கு வற்புறுத்திய வியாபாரி கைது


விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை; திருமணத்துக்கு வற்புறுத்திய வியாபாரி கைது
x
தினத்தந்தி 26 March 2022 9:44 PM IST (Updated: 26 March 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே விஷம் குடித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரை திருமணம் செய்ய வற்புறுத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

தேனி:
தேனி அருகே விஷம் குடித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரை திருமணம் செய்ய வற்புறுத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி மாணவி
தேனி அருகே உள்ள டொம்புச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர், போடியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர், அந்த மாணவி பள்ளிக்கு பஸ்சில் சென்று வரும் போது கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறினார். இதனால், மணிகண்டனை மாணவியின் தந்தை கண்டித்தார்.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்த மாணவியை, மணிகண்டன் கத்தியை காட்டி மிரட்டி தனது மோட்டார் சைக்கிளில் குரங்கணிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள ஒரு கோவிலில் மாணவியை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி அவரை தொந்தரவு செய்தார்.
விஷம் குடித்து தற்கொலை
திருமணத்துக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், அவரை மீண்டும் போடி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு நடந்ததை வெளியே கூறக்கூடாது என்று மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவிக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய மணிகண்டன் தன்னுடன் வருமாறு மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து மாணவி, தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மாணவி, தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 
அவர் வாந்தி எடுப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே மாணவி உயிரிழந்தார்.
பழைய இரும்பு வியாபாரி கைது
இந்த தற்கொலை குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் கொடுத்த தொந்தரவால் மாணவி தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. 
இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக மணிகண்டனை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையே மாணவிக்கு தொந்தரவு கொடுத்தது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், மாணவியின் புகாரின் பேரில் போக்சோ, இந்திய தண்டனை சட்டம் 506 பிரிவு 2 (ஆயுதம் காட்டி கொலை மிரட்டல்), 366 (பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ய கடத்திச் செல்லுதல்) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான மணிகண்டன் கோவையில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் டொம்புச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story