போடிமெட்டு மலைப்பாதையில் ரேஷன் அரிசி கடத்திய ஜீப்பை விரட்டி பிடித்த அதிகாரிகள்
போடிமெட்டு மலைப்பாதையில் ரேஷன் அரிசி கடத்திய ஜீப்பை சினிமா பாணியில் அதிகாரிகள் விரட்டி சென்று பிடித்தனர்.
உத்தமபாளையம்:
போடிமெட்டு மலைப்பாதையில் ரேஷன் அரிசி கடத்திய ஜீப்பை சினிமா பாணியில் அதிகாரிகள் விரட்டி சென்று பிடித்தனர்.
நிற்காமல் சென்ற ஜீப்
தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப்பாதையில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே, உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை அதிகாரிகள் மறித்தனர். ஆனால் டிரைவர் ஜீப்பை நிறுத்தாமல், அங்கிருந்த வருவாய்த்துறையினர் மீது மோதுவது போல ஓட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சாலையோரம் ஒதுங்கி உயிர்தப்பினர்.
1½ டன் ரேஷன் அரிசி
பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஜீப் வேகமாக கேரளா நோக்கி சென்றது. வருவாய்த்துறையினர், மற்றொரு ஜீப்பில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இதை அறிந்த ஜீப் டிரைவர் ஓடிக்கொண்டிருந்த வாகனத்தில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அந்த ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதையடுத்து பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்பை வருவாய்த்துறையினர் சோதனை செய்தனர். அப்போது ஜீப்பில், கேரளாவுக்கு கடத்தி செல்ல இருந்த 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனால் ரேஷன் அரிசி மற்றும் ஜீப்பை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் தப்பிஓடிய ஜீப் டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் கோடங்கிபட்டியை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு போடியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது.
டிரைவருக்கு வலைவீச்சு
இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய ஈஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்திய ஜீப்பை அதிகாரிகள், சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story