வாகனம் மோதியதில் தலை நசுங்கி தம்பதி பலி


வாகனம் மோதியதில் தலை நசுங்கி தம்பதி பலி
x
தினத்தந்தி 26 March 2022 9:54 PM IST (Updated: 26 March 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே, வாகனம் மோதியதில் தலை நசுங்கி தம்பதி பலியானார்கள்.

திண்டுக்கல்:
வாகனம் மோதல்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சாரங்கபாணி (வயது 60). அவருடைய மனைவி பஞ்சவர்ணம் (56). இவர்கள் 2 பேரும், திருப்பூரில் வசிக்கிற தங்களது மகனை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை மொபட்டில் புறப்பட்டனர்.
வத்தலக்குண்டு-செம்பட்டி சாலையில், புல்வெட்டிகுளம் அருகே மொபட் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று, கண்இமைக்கும் நேரத்தில் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
தலை நசுங்கி பலி
சாலையில் விழுந்த 2 பேரும் சுதாரித்து எழுவதற்குள் அந்த வழியாக அடுத்தடுத்து வந்த வாகனங்களின் சக்கரங்கள் அவர்களின் தலையில் ஏறி இறங்கின. இதில் 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய தம்பதியினர் தலை நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story