60 கிலோ மீட்டருக்குள் உள்ள சுங்கச்சாவடிகள் கணக்கெடுப்பு
தமிழ்நாட்டில் 60 கிலோ மீட்டருக்குள் உள்ள சுங்கச்சாவடிகள் கணக்கெடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
தமிழ்நாட்டில் 60 கிலோ மீட்டருக்குள் உள்ள சுங்கச்சாவடிகள் கணக்கெடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
ரூ.95 கோடி ஒதுக்கீடு
நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் உள்ள சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டதை தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையும், பார்வதிபுரம் முதல் காவல்கிணறு வரையிலும் தேசிய நெடுஞ்சாலையை 78 கி.மீ. தூரத்துக்கு இந்த ஆண்டில் பராமரிப்பு செய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 76 கி.மீ. தூரத்துக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.95 கோடியில் பணிகள் நடைபெற உள்ளது.
உயர்மட்ட பாலங்கள்
குமரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகள் இந்த ஆண்டிலேயே சீரமைக்கப்படும். மோதிரமலை- குற்றியாறு சாலையில் ஒரு உயர்மட்டப்பாலம், காளிகேசம்- கீரிப்பாறையில் 2 உயர்மட்டப்பாலங்கள் கட்ட ரூ.16 கோடி அனுமதிக்கப்பட்டு விட்டது. விரைவில் இதற்கான பணி தொடங்கி விடும். கூடங்குளம் செல்லும் சாலையில் உள்ள குறுகலான பாலத்தை விரிவுபடுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கணபதியான்கடவு பகுதியில் வளைவு பகுதியை சீர்செய்து விரிவுபடுத்த ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு விட்டது. அந்த பணியும் விரைவில் தொடங்க இருக்கிறது.
விபத்துகள் குறைவு
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய மந்திரி நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஒரு காலத்தில் விபத்துகளில் தமிழகம் முன்னிலையில் இருந்தது. தற்போது புதிய ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு விபத்தை குறைப்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளனர். இதனால் விபத்துகள் குறைந்துள்ளது. சதவீத கணக்குப்படி பார்த்தால் தமிழகத்தில் 15 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
அந்த அடிப்படையில் சாலை பாதுகாப்புக்காக மட்டும் இந்த மாவட்டத்துக்கு ரூ.5.30 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் வண்ண விளக்குகள், வேகத்தடை போன்ற பணிகள் செய்கிறோம். சாலை பாதுகாப்பில் நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, மோட்டார் வாகன துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, சுகாதாரத்துறை என 5 துறைகள் ஈடுபடுகின்றன.
நிரந்தரமாக சீர்செய்ய நடவடிக்கை
தமிழக அரசை பொறுத்தவரையில் ரூ.200 கோடி சி.ஆர்.டி.பி. மூலமாக சாலை பாதுகாப்புக்காக ஒதுக்கப்படுகிறது. அந்த பணத்தில் தான் இந்த மாவட்டத்துக்கு ரூ.5.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரையில் பார்வதிபுரம் முதல் காவல்கிணறு வரையில் 48.64 கி.மீ. சாலை ரூ.49 கோடியில் சீரமைக்கப்படுகிறது.
அதுபோன்று விபத்து ஏற்படும் 4 பகுதிகளை கணக்கெடுத்துள்ளோம். அதை கண்டறிந்து அதை சரிசெய்வதற்காக ரூ.3.66 கோடியில் பணிகளை தொடங்க உள்ளோம். இதுபோன்ற பல பணிகள் குமரி மாவட்டத்தில் வெள்ள சேதத்துக்கு பிறகு மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி இந்த மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து மாவட்டத்தின் சாலைகளை சீர்செய்கிறோம். மேலும் மழை வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ள சாலைகளை நிரந்தரமாக சீர் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கடலரிப்பை தடுக்க...
மாநில நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பு என்பது காலம், காலமாக இருப்பதுதான். ஆனாலும் இந்த அரசை பொறுத்தவரையில் சாலைகளை அகலப்படுத்துவதிலும் சரி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் சரி கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முறை தமிழகத்தில் 8 சாலைகளை அதாவது 500 கி.மீ. சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மூலமாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். நானும் நேரடியாக மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். அவரும் பிரதமருடன் பேசி தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளார்.
ராமேசுவரம் பகுதியில் கடலரிப்பை நிறுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். அதேபோல் கடலரிப்பு ஏற்பட்டுள்ள பள்ளம் பகுதியில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என முடிவு செய்துள்ளோம். அதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பவும் கோட்ட பொறியாளருக்கு கூறியுள்ளோம்.
சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை
சுங்கச்சாவடியை பொறுத்தவரையில் கேரளாவையும், தமிழகத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் தமிழகத்தில் சுங்கச் சாவடியின் அளவு அதிகமாக இருக்கிறது. ஏறத்தாழ 47 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் இருப்பது என்பது அதிகம். நகராட்சி பகுதிகள், மாநகராட்சி பகுதிகளில் 10 கி.மீ.க்குள் சுங்கச்சாவடி இருக்கக்கூடாது என்று விதி இருக்கிறது. அந்த விதியை பயன்படுத்தி 5 சுங்கச் சாவடியை முதல்கட்டமாக எடுக்க வேண்டும் என சென்றமுறை நான் கடிதம் கொடுத்திருந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் நினைவூட்டுக் கடிதம் கொடுத்து வலியுறுத்தி உள்ளேன்.
மத்திய மந்திரி நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் பேசும்போது இனிமேல் 60 கி.மீ.க்குள் சுங்கச்சாவடி இருக்காது. இருந்தால் அவற்றை எடுத்து விடுவோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே எனது துறை உயர் அதிகாரிகளிடம் இதுபோன்று தமிழகத்துக்குள் 60 கி.மீ.க்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் பட்டியலை தயார் செய்யும்படி கூறியுள்ளேன். அந்த பட்டியல் தயாரித்ததும் நானே நிதின்கட்கரிக்கு கடிதம் அனுப்பி சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்துவேன்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
Related Tags :
Next Story