தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 March 2022 10:21 PM IST (Updated: 26 March 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

மணல் திருட்டு

வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் கீழே பாலாற்றில் தினமும் இரவில் மணல் கடத்தல் சம்பவம் நடக்கிறது. இதுபற்றி பல முறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் மணல் திருட்டை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் திருடுவதால் ஆற்றின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அக்கம் பக்கத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும். எனவே மணல் திருட்டை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
-ராஜா, சேண்பாக்கம்.

மின் விளக்கு எரியவில்லை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் போலீஸ் நிலையம் எதிரில் சென்னை செல்லும் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பயணிகள் நிழற்குடையில் உள்ள மின் விளக்கு எரியவில்லை. இதனால் பயணிகளுக்கு திருடர்கள் பயம் உள்ளது. மேற்கண்ட இடத்தில் தெரு மின் விளக்கும் எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்கை எரியவிட ேவண்டும்.
-எஸ்.இளவரசி, கீழ்பென்னாத்தூர்.

 புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர் ஊராட்சி புதூர் ஆதிதிராவிடர் காலனியில் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.அவர்களுக்காக கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தொட்டி பல ஆண்டுகளாக பயனின்றி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் அருகில் அங்கன்வாடி ஊட்டச்சத்து மையம் உள்ளது. நீர்த்தேக்கத்தொட்டியை இடித்து விட்டு புதிய நீர்த்தேக்கத்தொட்டி கட்டித்தர வேண்டும்.
-கே.காளிமூர்த்தி, செவ்வாத்தூர். 

 தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?



வேலூர் சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனி 4-வது தெருவில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயின் தடுப்புச்சுவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உடைந்துள்ளது. இதுவரை தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் வளைவு பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கால்வாயில் விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்பாபு, வேலூர்.

 சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் 

வேலூர் சேண்பாக்கம் மாங்காய் மண்டி எதிரில் உள்ள சாலையில் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் நுழைந்து சென்று வந்தனர். ஆனால் ரெயில்வே மேம்பாலம் கீழே பஸ்கள், லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள் தகுதி சான்றுக்காக ஒருகிலோ மீட்டர் தூரத்துக்கு சர்வீஸ் சாலையில் பிறவாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எம்.ஏழுமலை, சேண்பாக்கம்.

ஆவின் பாலகம் திறப்பு எப்போது?



திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆவின் பாலகம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவல் சமயத்தில் இந்த கடையின் முன்பு கூட்டம் அதிகமாக கூடியதால் கடையை மூட மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தரவிடபட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து உள்ளதால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்களின் நலனை கருதி மீண்டும் ஆவின் பாலகம் திறக்க உரிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்மோகன், திருவண்ணாமலை.


Next Story