ரூ.58 கோடியே 36 லட்சம் நகை கடன் தள்ளுபடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 84 கூட்டுறவு அமைப்புகளில் ரூ.58 கோடியே 36 லட்சம் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானது என கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் லலிதா கூறி உள்ளார்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 84 கூட்டுறவு அமைப்புகளில் ரூ.58 கோடியே 36 லட்சம் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானது என கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் லலிதா கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடன் தள்ளுபடி
கூட்டுறவு அமைப்புகளில் 5 பவுன் வரை (40 கிராம்) நகைகளை அடமானமாக வைத்து பெறப்பட்ட நகை கடன்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளில் 5 பவுன் (40 கிராம்) வரை அடமானமாக பெறப்பட்டு கடன் வழங்கப்பட்டு நிலுவையில் இருந்த நகை கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 84 கூட்டுறவு அமைப்புகளில் பெறப்பட்ட 20 ஆயிரத்து 197 கடன்களில் ரூ.58 கோடியே 36 லட்சம் மதிப்புடைய நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானது என்று கண்டறியப்பட்டு உள்ளது.
நகைகளை பெற்றுக்கொள்ளலாம்
இதற்கான தணிக்கை செய்யப்பட்ட பட்டியல்கள் தொடர்புடைய கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு, அரசு அறிவிப்பின்படி தகுதி பெற்ற கடன்தாரர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடன்தாரர்கள் தொடர்புடைய கூட்டுறவு சங்க செயலாளர், மேலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு தகுதி பட்டியலில் இடம் பெற்றிருப்பின் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story