ரேஷன் கடை அமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கோட்டூர் அருகே ரேஷன் கடை அமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்;
கோட்டூர் அருகே ரேஷன் கடை அமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேல கண்டமங்கலம் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பழனி தலைமையில் அப்பகுதி மக்கள் ரேஷன் அட்டையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது மேல கண்டமங்கலம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கிழச்சேரி ரேஷன்கடையில் அரிசி, மண்எண்ணெய், சீனி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகிறார்கள். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் ஒருநாள் வேலையை கைவிட்டு தான் செல்ல வேண்டும். அப்படி சென்றாலும் ரேஷன் கடையில் வழங்க கூடிய அத்தனை பொருட்களையும் வாங்க முடியாது.
உண்ணாவிரதம்
மேலும் ரேஷன் கடைக்கு செல்லும் சாலை மேடு பள்ளங்கள் நிறைந்த கப்பி சாலையாக உள்ளது. எனவே மேலகண்டமங்கலம் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியல் நடந்தது. அப்போது அங்கு வந்த மன்னார்குடி வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மேல கண்டமங்கலம் கிராமத்தில் ரேஷன் கடை திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. ஆனால் எங்கள் கிராமத்தில் இதுநாள் வரை ரேஷன் கடை திறக்கப்படவில்லை. விரைவில் ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். திடீரென நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story