‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி சிறுவனின் வீட்டுக்கு சென்று ஆதார் பதிவு செய்த தபால் நிலைய ஊழியர்கள்


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி சிறுவனின் வீட்டுக்கு சென்று ஆதார் பதிவு செய்த தபால் நிலைய ஊழியர்கள்
x
தினத்தந்தி 26 March 2022 11:01 PM IST (Updated: 26 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் தபால் நிலைய ஊழியர்கள் சிறுவனின் வீட்டுக்கு சென்று ஆதார் பதிவு செய்தனர்.

வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 42). அவருடைய மனைவி ஜெயராணி. இந்த தம்பதிக்கு தீபக் மறுவரசன் (3) என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி, கடந்த 9-ந்தேதி தனது மகனுக்கு ஆதார்கார்டு எடுப்பதற்காக வேடசந்தூரில் உள்ள தனியார் வங்கிக்கு சிறுவனுடன் சென்றார். அப்போது, வங்கியின் முன்புறம் அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். தந்தை இறந்தது தெரியாமல் அவரை தட்டி எழுப்பியபடி தீபக் மறுவரசன் அழுது கொண்டிருந்த காட்சி கல்நெஞ்சையும் கரைய செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த 10-ந்தேதி ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஆதார் நிறுவனத்தின் பெங்களூரு தலைமை அலுவலகத்தில் இருந்து, பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து ஆதார் கார்டு எடுத்து கொடுக்குமாறு திண்டுக்கல் மாவட்ட அரசு கேபிள் துணை மேலாளர் பிரகாசுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் பிரகாஷ், நாகையகோட்டை தபால் நிலைய ஊழியர்களை தொடர்பு கொண்டு சிறுவனின் வீட்டுக்கு சென்று ஆதார் பதிவு செய்ய அறிவுறுத்தினார்.  இதனையடுத்து தபால் நிலைய ஊழியர்கள், தீபக் மறுவரசன் வீட்டிற்கு சென்று ஆதார் பதிவு செய்தனர். இதுகுறித்து தீபக் மறுவரசனின் தாய் நாகராணி கூறுகையில், ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் வீட்டிற்கு வந்து ஆதார் பதிவு செய்தனர். மேலும் கணவனை இழந்து தையல் தொழில் செய்து மகனை காப்பாற்றிவரும் எனக்கு படிப்புக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு அரசு வேலை கொடுத்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.


Next Story