மயிலாடி பேரூராட்சி பா.ஜனதா வசமானது துணை தலைவர் பதவி தி.மு.க.வுக்கு கிடைத்தது
மயிலாடி பேரூராட்சியில் தலைவர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது. துணைத்தலைவராக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு ெசய்யப்பட்டார்.
அஞ்சுகிராமம்,
மயிலாடி பேரூராட்சியில் தலைவர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது. துணைத்தலைவராக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு.
தேர்தல் நிறுத்தி வைப்பு
மயிலாடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 2 இடங்களையும், அ.தி.மு.க. 4 இடங்களையும், பா.ஜனதா 5 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியது. மேலும் 3 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதனால் யாருக்கும் மெஜாரிட்டி கிைடக்காத நிலை ஏற்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி பேரூராட்சிகளில் தலைவர் தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் மயிலாடி பேரூராட்சியில் கவுன்சிலர் ஒருவரை கடத்தியதாக புகார் எழுந்தது. இதனால் போதிய கவுன்சிலர்கள் ஓட்டு போட வராததால் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தி.மு.க.வில் இணைந்தனர்
இந்தநிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் திடீரென தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்தார். மேலும் ஒரு அ.தி.மு.க. கவுன்சிலரும், 2 சுயேச்சை கவுன்சிலர்களும், ஒரு காங்கிரஸ் கவுன்சிலரும் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். இதனால் தி.மு.க.வின் பலம் 7 ஆக உயர்ந்தது.
தலைவர் பதவிைய கைப்பற்ற 8 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. இதையடுத்து மேலும் ஒருவரின் ஆதரவை பெற தி.மு.க. தீவிர முயற்சியில் களம் இறங்கியது.
இதற்கிைடயே அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இதனால் பா.ஜனதா கட்சியின் பலம் 6 ஆக உயர்ந்தது. மேலும் அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் இணைந்து தேர்தலை சந்திக்க தயாரானார்கள்.
பா.ஜனதா வெற்றி
இந்தநிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட மயிலாடி பேரூராட்சி தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் அன்ன சுமதியும், பா. ஜனதா சார்பில் விஜயலட்சுமியும் போட்டியிட்டனர். இந்த மறைமுக தேர்தலில் 15 கவுன்சிலர்களும் ஒவ்வொருவராக சென்று தனது வாக்குகளை பதிவு செய்தனர். ெதாடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட விஜயலட்சுமி 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னசுமதி 6 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தி.மு.க.விற்கு 7 பேர் ஆதரவு அளித்து வந்த நிலையில் அதில் ஒரு கவுன்சிலர் பா.ஜனதாவுக்கு வாக்களித்து இருப்பது பரபரப்பாக பேசப்பட்டது.
வாழ்த்து
தலைவராக வெற்றி பெற்ற விஜயலட்சுமிக்கு எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், ஜெகநாதன், சுபாஷ், ஒன்றிய தலைவர் சுயம்புலிங்கம் உள்பட பா.ஜனதா கட்சியினர் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மயிலாடி பேரூராட்சி தலைவர் பதவி தி.மு.க. வசம் இருந்து வந்த நிலையில் முதல் முறையாக பா.ஜனதா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
துணைத்தலைவர் தேர்தல்
மாலையில் நடந்த துணை தலைவர் தேர்தலுக்கு 9 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். துணைத் தலைவர் வேட்பாளராக தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சாய்ராம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் சாய்ராம் போட்டியின்றி துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சாய்ராம் ஏற்கனவே 3 முறை தி.மு.க. சார்பில் பேரூராட்சி தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் பாதுகாப்பு
இந்த தேர்தலையொட்டி கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா தலைைமயில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி, அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story