பிளஸ்-1 மாணவர் தற்கொலை: குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது


பிளஸ்-1 மாணவர் தற்கொலை: குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது
x
தினத்தந்தி 26 March 2022 11:23 PM IST (Updated: 26 March 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவர் தற்கொலை: குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது

நாமக்கல்:
பள்ளிபாளையம் அருகே பிளஸ்-1 மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாணவர் தற்கொலை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள மோடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ரிதுன் (வயது 17). இவர் தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 24-ந் தேதி பள்ளிக்கு வந்த மாணவர் ரிதுன், சக மாணவி ஒருவரிடம் பேசி உள்ளார். அதை பார்த்த ஆசிரியை ஒருவர், கடுமையாக திட்டியதுடன் மாணவரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாகவும், வகுப்பறையை விட்டு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைத்து தண்டனை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் ரிதுன், ரெயில் என்ஜின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட ஆசிரியையை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவரின் பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
சாலை மறியல்
அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க முயன்றனர். அப்போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்தனர். அதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலை கைவிட்டனர்.
இதையடுத்து கலெக்டர் ஸ்ரேயா சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். இருப்பினும் உதவி கலெக்டர் விசாரணை நடத்துவதற்கான உத்தரவு நகல் கிடைத்தால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும். அதுவரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாலை 5 மணி அளவில் உதவி கலெக்டர் விசாரணை நடத்துவதற்கான நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story