மேகதாதுவில் கர்நாடக அரசு ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது; அமைச்சர் துரைமுருகன் பேட்டி
தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடக அரசால் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என்று வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்
தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடக அரசால் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என்று வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
புகைப்பட கண்காட்சி
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புதுறையின் சார்பில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 'விடுதலை போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு' என்ற புகைப்பட கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி வேலூர் பெரியார் பூங்காவில் நேற்று நடந்தது.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி., ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில், இந்திய விடுதலைக்கான சுதந்திர போராட்டம் வேலூரில் தொடங்கிய சிப்பாய் புரட்சிதான். ஆனால் வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் வேலூர் சிப்பாய் புரட்சியை வரலாற்றில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.
தமிழகத்துக்கு அந்த பெருமை செல்ல கூடாது என்பதில் குறியாக இருந்தனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜமதக்னி உள்பட பலர் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று தங்களை அர்ப்பணித்து உள்ளனர். அவர்களின் தியாகங்களை மறக்க கூடாது என்றார்.
தியாகிகளின் புகைப்படம்
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பரத்குமார் (பொறுப்பு) நன்றி கூறினார்.
கண்காட்சியில், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழகம் மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தியாகிகளின் புகைப்படம், சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்கு உள்ளிட்டவை புகைப்படத்துடன் இடம்பெற்றிருந்தன. மேலும் பல்வேறு அரசுத்துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் மற்றும் டிரிபியூனல் கோர்ட்டின் உத்தரவையும் மதிக்கவில்லை.
காவிரி ஆற்றின் தண்ணீர் கர்நாடக அரசுக்கு மட்டும் சொந்தம் கிடையாது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது. இது கர்நாடக அரசுக்கும் தெரியும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது. அதற்கு கீழ்படிந்து நடப்பதுதான் இந்திய ஜனநாயகம். ஒரு மாநிலமே உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கமாட்டோம் என்று சொன்னால், பிறகு இந்தியாவில் எப்படி ஒருமைப்பாடு ஏற்படும்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டுவது சாத்தியமில்லை. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்புக்குழுவிற்கு என்னென்ன அதிகாரங்கள் தேவை என்பதை வரும் வழக்கு விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நாங்கள் மனுதாக்கல் செய்ய உள்ளோம். தமிழகத்தில் விரைவில் மணல் குவாரிகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story