நாகையில், 1-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம்


நாகையில், 1-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 26 March 2022 11:32 PM IST (Updated: 26 March 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

நாகூர் வெட்டாற்று பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாகையில், 1-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

நாகப்பட்டினம்:
 நாகூர் வெட்டாற்று பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாகையில், 1-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
 நாகூர் வெட்டாற்று பாலத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 6 மாதம் நடைபெற உள்ளது. இதனால் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் 1-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறதுஅதன்படி காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வாகனங்களும் வாஞ்சூர் சோதனைச் சாவடியில் இருந்து, இடது பக்கம் திரும்பும் நாகூர் நகர சாலை வழியாக நாகைக்கு செல்ல வேண்டும்.
வேளாங்கண்ணி-காரைக்கால்
பின்னர் அங்கிருந்து நாகை மேலக்கோட்டைவாசல் படி வழியாக புத்தூர் ரவுண்டானா, வேளாங்கண்ணி, திருவாரூர் செல்ல வேண்டும். இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் திருவாரூர் செல்ல வாஞ்சூர் சோதனைச் சாவடியில் இருந்து திட்டச்சேரி சாலை வழியாகவும், கிழக்கு கடற்கரை சாலையில் புனரமைப்பு பணி நடைபெறும் வெட்டாறு பாலத்திற்கு முன்பு வலது புறம் திரும்பும் கங்களாஞ்சேரி சாலை வழியாகவும் செல்ல வேண்டும்.
புத்தூர் ரவுண்டானா
அதேபோல வேளாங்கண்ணியில் இருந்து காரைக்கால் செல்லும் வாகனங்கள் புத்தூர் ரவுண்டானா வந்து, அங்கிருந்து மேலகோட்டைவாசல் படி அருகே இடதுபுறம் பிரியும் மாநில நெடுஞ்சாலை வழியாக நாகூருக்கு சென்று, பின்னர் அங்கிருந்து காரைக்கால் செல்ல வேண்டும். அல்லது புத்தூர் ரவுண்டனாவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பிரியும் அமிர்தா பள்ளி அருகே உள்ள வடகுடி சாலை வழியாக வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் சாலையை வந்தடைந்து நாகூர் நகர சாலை வழியாக செல்ல வேண்டும்.
கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை
இதில் வேளாங்கண்ணியில் இருந்து காரைக்காலுக்கு கனரக வாகனங்கள் செல்ல வேண்டும் என்றால், திருவாரூர் சென்று அங்கிருந்து கங்களாஞ்சேரி வழியாக காரைக்காலுக்கு செல்ல வேண்டும்.
போக்குவரத்து மாற்றப்பட்டுள்ள இரண்டு சாலைகளிலும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த தகவல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story