சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இதில் போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசங்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தாசில்தார்கள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
மாணவர்களிடையே மோதல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள், சாலை விபத்துகளை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே அவ்வப்போது சில கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வருகிறது. இதனை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து மாணவர்களுக்கு அறநெறிகளை கற்பிக்க வேண்டும்.
பஸ்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கிறார்கள். எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து குற்றச்சம்பவங்கள் ஏற்படாதவாறும், அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story