பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தியிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்


பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தியிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 26 March 2022 11:37 PM IST (Updated: 26 March 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

நாகையில், பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தியிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்தவர்களை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெளிப்பாளையம்:
நாகையில், பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தியிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்தவர்களை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
நாகை கொட்டுபாளையத்தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 42). இவர்  பா.ஜ.க. முன்னாள் நகர துணைத்தலைவர். இவரது வீட்டின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தன.  இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உதயகுமார் வீட்டு கதவைத்தட்டி மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிவதாக தெரிவித்து விட்டு தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் 3 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக எரிந்து நாசமாயின.
போலீசில் புகார்
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுதொடர்பாக நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்தார். 
தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 
மர்ம நபர்கள் தீ வைத்தார்களா?
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
இந்த நிலையில் பா.ஜ.க. பிரமுகர் உதயகுமார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்தவர்களை கைது செய்யக்கோரி வெளிப்பாளையம் அண்ணா சிலை பகுதியில் பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நேதாஜி முன்னிலை வகித்தார். மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்தவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
100 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் பா.ஜ.க.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.   இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story