தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், ஆர்.வளவனூர் 1-வது வார்டு பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பிரபாகரன், ஆர்.வளவனூர், திருச்சி.
குரங்குகளால் தொல்லை
பெரம்பலூர் நகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியில் நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் காய்கறிகள், மளிகை பொருட்கள், தின்பண்டங்களை எடுத்துச்சென்று விடுகின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள கொய்யா, மா மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுமட்டுமின்றி குழந்தைகளை கடிக்க வருவதுபோல் பயமுறுத்துகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து சென்று வனப்பகுதியில் விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வெங்கடேசபுரம், பெரம்பலூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவலர் குடியிருப்பில் குப்பைத்தொட்டி இல்லாததால் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் இவற்றை தெருநாய்கள் கலைப்பதினால் காற்றில் குப்பைகள் பறந்து சென்று ஆங்காங்கே விழுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜ்குமார், அறந்தாங்கி, புதுக்கோட்டை.
நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படுமா?
கடலூரில் இருந்து தினமும் அதிகாலை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு வந்து பின்னர் இங்கிருந்து மதியம் புறப்பட்டு திரும்பவும் கடலூர் செல்லும். இந்த ரெயில் மூலம் ஏராளமான பொதுமக்கள் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு வந்து சென்றனர். ஆனால் தற்போது இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலசுப்பிரமணியம், கூத்தூர், திருச்சி.
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், நடையனூர் பேச்சிப்பாறை மின் மயானத்தின் அருகே மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அந்த மின் கம்பத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடையும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நடையனூர், கரூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி உறையூர் 58-வது வார்டு டாக்கர் பங்கள் பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உறையூர், திருச்சி.
உயர் கோபுர மின் விளக்கு பழுது
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கேட் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்கு கடந்த பல மாதங்களாக எரியாமல் இருந்தது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரிசெய்தனர். இந்த நிலையில் தற்போது பாதி பல்புகள் எரியும் நிலையில், மீதம் உள்ள பல்புகள் எரியாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம், புதுக்கோட்டை.
தெருநாய்கள் தொல்லை
திருச்சி மாவட்டம், கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவை அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அவர்களை கடிக்க துரத்துகின்றன. மேலும் இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்புவர்களை தெருநாய்கள் ஒன்று சேர்ந்து துரத்துவதினால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதேபோல் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி வருகின்றன. இதனால் ஏர்போர்ட் வயர்லஸ் ரோடு பகுதியில் அதிக அளவில் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அப்துல் முத்தலிப், செம்பட்டு, திருச்சி.
பராமரிக்கப்படாத அறிவியல் பூங்கா
திருச்சி-தென்னூர் அண்ணாநகர் பகுதியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பு இன்றி உடைந்து காணப்படுகிறது. மேலும் கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த அறிவியல் பூங்காவை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தென்னூர், திருச்சி.
நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து, குன்னுப்பட்டி, கோட்டாத்தூர், புத்தனாம்பட்டி, எதுமலை, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம் வரை காலை நேரத்திலும், இதே வழித்தடத்தில் சிறுகனூர் வரை மாலையும் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதேப் போன்று மதியம் 3 மணிக்கு முசிறியிலிருந்து, தண்டலைப்புத்தூர், புலிவலம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி, கோட்டாத்தூர் வழியாக துறையூர் வரை ஒரு அரசு புறநகர் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த 2 அரசு பஸ்களும் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 2 அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரவணன் நடேசன், புத்தனாம்பட்டி, திருச்சி.
Related Tags :
Next Story