புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு-உப்பிடமங்கலம் துணைத்தலைவராக தி.மு.க. வேட்பாளர் தேர்வு
போதிய கவுன்சிலர்கள் வராததால் புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவராக தி.மு.க. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.
கரூர்,
புலியூர் பேரூராட்சி
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளில் தி.மு.க.வும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பா.ஜனதா, சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றனர். இதையடுத்து, புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. சார்பில் 3-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புவனேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் புவனேஸ்வரி கடந்த 8-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தேர்தல் ஒத்திவைப்பு
இந்தநிலையில், புலியூர் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலராக லோகநாதன் மற்றும் மேற்பார்வையாளர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலரும், துணைத்தலைவருமான அம்மையப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கலாராணி, பா.ஜனதாவை சேர்ந்த விஜயகுமார் ஆகிய 3 பேர் மட்டுமே வந்தனர். மீதமுள்ள 12 கவுன்சிலர்கள் வரவில்லை.
பேரூராட்சி தலைவரை தேர்வு செய்ய குறைந்தபட்சம் 8 கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் போதிய கவுன்சிலர்கள் இல்லாத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
உப்பிடமங்கலம் பேரூராட்சி
உப்பிடமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பாக்கியலட்சுமி மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேறுயாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமார் அறிவித்தார்.
Related Tags :
Next Story