கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு


கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 27 March 2022 12:30 AM IST (Updated: 27 March 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முத்தமிழ்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கீரமங்கலம்:
துணைத்தலைவர் தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த 13 பேரும், 2 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இவர்களில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 4-ந் தேதி நடந்தது. காலையில் நடந்த தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த சிவக்குமார் போட்டியின்றி ேதா்வு பெற்று பதவி ஏற்றார். 
மாலையில் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கவுன்சிலர் முத்தமிழ்செல்வி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தி.மு.க. சார்பில் கவுன்சிலா் தமிழ்செல்வன் போட்டி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்ததால் மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில் தமிழ்செல்வன் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று துணைத்தலைவராக பதவி ஏற்றார். முத்தமிழ்செல்வி 4 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமையில் தி.மு.க. வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மீண்டும் நடந்த தேர்தல்
இந்த நிலையில் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தி.மு.க.வை சேர்ந்த தலைவர், துணைத்தலைவர்கள் உடனே ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை கொடுத்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 8-ந் தேதி தமிழ்செல்வன் தனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 
இதனை தொடர்ந்து நேற்று நடந்த துணை தலைவர் தேர்தலில் பேரூராட்சி தலைவர் சிவக்குமார் உள்பட 8 தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் நடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் முத்தமிழ்செல்வி துணைத் தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் முத்தமிழ்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் 1, சுயேச்சை கவுன்சிலர்கள் 2 பேர் என 5 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.

Next Story