ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த 13 பேர் மீது வழக்கு


ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது  அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த 13 பேர் மீது வழக்கு
x

அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விராலிமலை:
விராலிமலை தாலுகா செரளப்பட்டியில் பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியிருப்பதாக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். இதனையடுத்து விராலிமலை தாசில்தார் சரவணன், தலைமை நில அளவர் சாகுல் ஹமீது தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை ஒருமையில் பேசி வேலை செய்யவிடாமல் தடுத்தனர். இதனையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு பாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை அகற்றிக்கொள்வதாகவும் அதற்கு 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என சம்பந்தப்பட்ட நபர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவகாசம் வழங்கி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து பொய்யாமணி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ஜீவானந்தம் ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியும், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய செரளப்பட்டியை சேர்ந்த கோபால், அவரது மனைவி பாக்கியம், அழகன், கவுதமன், வேலம்மாள், தாமரைச்செல்வன், தேவராஜன், கவுசல்யா, வள்ளி உள்பட 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story