காவிரி ஆற்றின் கரையில் தனியார் நிறுவனம் மணல் அள்ளுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
காவிரி ஆற்றின் கரையில் தனியார் நிறுவனம் மணல் அள்ளுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்து உள்ளனர்.
நொய்யல்,
காவிரி ஆறு
தோட்டக்குறிச்சி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக முதல்-அமைச்சரின் தனி பிரிவு மற்றும் கரூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றின் கரையில் தனியார்நிறுவனம் ஒன்று கட்டிடங்களுக்கு தேவையான கான்கிரீட் கலவை தயார் செய்வதற்கு தேவையான மணலை தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அள்ளி பயன்படுத்தி வருகிறது.
நீர்வளம் பாதிப்பு
ஆற்றின் கரையோரம் உள்ள பட்டா நிலங்களில் மணல் அள்ளக்கூடாது என்ற விதியை மீறி இந்நிறுவனம் இரவில் பல அடி ஆழத்திற்கு மணலை அள்ளுகிறது. பின்னர் அக்குழியில் செம்மண்ணை கொட்டி மறைத்து விடுகின்றனர். இவ்வாறு பல அடி ஆழத்திற்கு மணலை அள்ளுவதால் ஆற்றின் கரையோரம் நீரூற்று வற்றுகிறது. இதனால் அருகே உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது கோடை காலமாக உள்ளதால் தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு போதுமான நீர் கிடைக்காமல் காய்ந்து வருகிறது.
மேலும் கரையை ஒட்டி மணல் அள்ளுவதின் மூலம் ஆற்றின் நீர்வளம் பாதிக்கப்படுவதோடு அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே விதிகளை மீறி தனியார் நிறுவனம் காவிரி ஆற்றின் கரையில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story