விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது; அண்ணாமலை பேட்டி


விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது; அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 27 March 2022 3:05 AM IST (Updated: 27 March 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாக அண்ணாமலை கூறினார்.

பெரம்பலூர்:

பயிலரங்கம்
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிலரங்கம் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தமிழக பா.ஜ.க. இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, இணை பொருளாளர் சிவசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்று பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
இதில் மத்திய இணை மந்திரி முருகன் பேசுகையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டுப்பெற்று செயல்படுத்த வேண்டும். மேலும் தங்களது பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி பொதுமக்களிடம் நற்பெயரை ஈட்ட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தங்களது பகுதி பொதுமக்களிடம் கொண்டு செல்ல அயராது உழைக்க வேண்டும், என்றார். இந்த பயிலரங்கம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
மத்திய அரசை எதிர்த்து அரசியல்
பின்னர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது;-
தமிழக முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து நான் அவதூறாக பேசியதாக தி.மு.க. மூலம் வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. என்ன வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அது தொடர்பாக கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பினால் பார்த்து கொள்ளலாம். தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கவர்னர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கூறுகின்ற, அந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகள் குறிப்பாக மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்கின்றன.
அந்த மாநிலங்களில் அரசியல் சட்ட திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து ஆட்சி செய்யக்கூடிய கட்சிகள் தான் இதை சொல்கின்றனர். குடியரசு தலைவர் பதவிக்கு தமிழகத்தில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் மட்டற்ற மகிழ்ச்சி தான். நான் 20 ஆயிரம் புத்தகங்களை படித்ததை தி.மு.க.வினர் விமர்சித்து வருவதாக கூறுகின்றனர். தி.மு.க.வில் யாரும் புத்தகங்கள் படிப்பதில்லை.
விலை உயர்வை கட்டுப்படுத்த...
தமிழகத்தை பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக மத்திய அரசின் நிதியில் தான் இயங்குகிறது. பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மத்திய இணை மந்திரி முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அதே கல்லூரியில் தங்கியிருந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story