பேராசிரியர் வீட்டின் கதவை திறந்து 7 பவுன் நகை-ரூ.40 ஆயிரம் திருட்டு


பேராசிரியர் வீட்டின் கதவை திறந்து 7 பவுன் நகை-ரூ.40 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 27 March 2022 3:05 AM IST (Updated: 27 March 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியர் வீட்டின் கதவை திறந்து 7 பவுன் நகை-ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

குன்னம்:

பேராசிரியர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகுபாடி கிராமத்தில் உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 60). விவசாயி. இவரது மனைவி ராஜம்மாள்(50). இவர்களது மகன் மணிவேல்(35). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமசிவம் அதே ஊரில் உள்ள வயலில் ஆடு, மாடுகளை பார்த்துக்கொள்ள காவலுக்கு சென்றார். மணிவேல் மற்றும் அவரது தாய் ராஜம்மாள் ஆகியோர் வீட்டின் பின்பக்க கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, முன்பக்க கதவை பூட்டாமல் கொண்டியில் சாத்திவிட்டு காற்றோட்டமாக வீட்டின் வராண்டாவில் தூங்கினர்.
நகை-பணம் திருட்டு
நேற்று அதிகாலை 4 மணி அளவில் மணிவேல் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை தட்டிப் பார்த்தும் திறக்காததால் பின்பக்கம் சென்று பார்த்துள்ளார். அப்போது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணிவேல் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த சுமார் 5½ அடி உயர பீரோவை காணவில்லை.
இதையடுத்து பீரோவை தேடிப்பார்த்தபோது வீட்டின் அருகில் உள்ள வயலில் கிடந்தது. அங்கு சென்று பார்த்தபோது கம்பியால் பீரோவின் கதவு நெம்பி உடைக்கப்பட்டு பீரோவின் லாக்கரில் இருந்த மஞ்சள் பையில் வைத்திருந்த சங்கிலி, மோதிரம், தோடு, மாட்டல் உள்பட 7 பவுன் நகைகளும், 80 கிராம் வெள்ளி அரைஞாண் கொடியும் மற்றும் ரூ.40 ஆயிரமும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாடாலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மருவத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story