நாங்குநேரி அருகே நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து என்ஜினீயர் உடல் கருகி பலி
நாங்குநேரி அருகே பந்தயத்தில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் என்ஜினீயர் உடல் கருகி பலியானார்
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே பந்தயத்தில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் என்ஜினீயர் உடல் கருகி பலியானார்.
ஐ.டி. நிறுவன ஊழியர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஸ்டியான். இவரது மகன் உதயா (வயது 25), என்ஜினீயர். ஐ.டி. நிறுவன ஊழியரான இவர் வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்தார்.
மேலும், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்க பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தினமும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி மலை வரை நான்கு வழிச்சாலையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
உடல் கருகி சாவு
நேற்று அதிகாலையில் தனது மோட்டார் சைக்கிளில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். நாங்குநேரி அருகே வாகைகுளம் பகுதியில் வந்த போது, திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் 2 துண்டாக உடைந்து வெப்பம் காரணமாக திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் படுகாயம் அடைந்து மயக்க நிலையில் கிடந்த உதயா மீதும் தீப்பிடித்தது. அவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான உதயா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story