கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்;‘ஹிஜாப்’ அணிந்து வந்து தேர்வு எழுத தடை


கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்;‘ஹிஜாப்’ அணிந்து வந்து தேர்வு எழுத தடை
x
தினத்தந்தி 27 March 2022 3:21 AM IST (Updated: 27 March 2022 3:21 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 8¾ லட்சம் மாணவர்கள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்தநிலையில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்து தேர்வு எழுத தடை விதித்து கர்நாடக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது

பெங்களூரு: கர்நாடகத்தில் 8¾ லட்சம் மாணவர்கள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்தநிலையில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்து தேர்வு எழுத தடை விதித்து கர்நாடக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

அதன்படி, ஏற்கனவே அறிவித்தபடி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வுகள் அடுத்த மாதம்(ஏப்ரல்) 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 15 ஆயிரத்து 387 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளனர்.

4 லட்சத்து 52 ஆயிரத்து 732 மாணவர்கள், 4 லட்சத்து 21 ஆயிரத்து 110 மாணவிகள் மற்றும் 3-ம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 பேர் தேர்வு எழுத இருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 3,444 தேர்வு மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கிறது. இவற்றில் 1,357 அரசு மையங்களிலும், 1,109 அரசு உதவி பெறும் மையங்களிலும், 978 தனியார் மையங்களிலும் தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

80 சதவீத பாடத்திட்டம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான பணிகளில் ஆசிரியர்கள், அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், ஊழியர்கள் உள்பட 68 ஆயிரத்து 680 பேர் ஈடுபட உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்காக கடந்த 16-ந் தேதியில் இருந்தே ஹால் டிக்கெட்(நுழைவு சீட்டு) வழங்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மாணவ-மாணவிகள் எந்த விதமான குழப்பமும் அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் 240 நாட்கள் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக 2021-22-ம் கல்வி ஆண்டில் 180 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடந்துள்ளது. இதன் காரணமாக 80 சதவீத பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்றும், மாணவ-மாணவிகள் 80 சதவீத பாடத்திட்டத்தை மட்டும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரி கோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

‘ஹிஜாப்’ அணிய தடை

இந்த நிலையில், கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்றும், ஹிஜாப், காவி துண்டு அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை என்றும் கடந்த மாதம்(பிப்ரவரி) 5-ந் தேதி அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது என்றும் தீர்ப்பு கூறி இருந்தது.
கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மாநிலத்தில் உள்ள சில பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி அளிக்க  கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில், நாளை (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத வருபவர்களும் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், ஹிஜாப் அணிந்து வந்து தேர்வு எழுத தடை விதித்தும் பள்ளி கல்வித்துறை நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சீருடை அணிவது கட்டாயம்

மாநிலத்தில் வருகிற 28-ந்தேதி (நாளை) முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் அரசின் உத்தரவுப்படி சீருடை அணிந்தே தேர்வை எழுத வேண்டும். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை. அரசு பள்ளிகளில் கட்டாயம் சீருடை அணிந்து மட்டுமே தேர்வு எழுத மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், அவற்றின் நிர்வாகம் எந்த மாதிரியான சீருடை அணிந்து வருவதற்கு உத்தரவிட்டுள்ளதோ, அதன்படி மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாா்கள். அரசின் உத்தரவையும், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவையும் அனைவரும் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுதேர்வு இல்லை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் முஸ்லிம் மாணவிகள் இடையே ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹிஜாப் விவகாரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. உள்ளிட்ட பொதுத்தேர்வை எழுதாமல் தேர்வை புறக்கணிப்போருக்காக மறுதேர்வு நடத்தப்படாது என்று ஏற்கனவே மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தேர்வு எழுத வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தாலும், தேர்வு அறைக்குள் ஹிஜாப் அணியாமல் சென்று தேர்வு எழுத முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை புறக்கணித்தால் மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை முதல் தொடங்க இருப்பதால் மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்கள், பள்ளிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வருகை பதிவு கட்டாயம் இல்லை

கர்நாடகத்தில் கொரோனா காரணமாக 2021-22-ம் கல்வி ஆண்டில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக பள்ளிகள் நடந்தது. 240 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களே வகுப்புகள் நடந்துள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகளும் சரியாக திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு வருகை பதிவு கட்டாயமில்லை என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் 75 சதவீதம் வருகை பதிவு இருந்தால் மட்டுமே மாணவ-மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் கொரோனா காரணமாகவும், மாணவ-மாணவிகளின் நலன் கருதியும் வருகை பதிவு கட்டாயமில்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வருகிற 21-ந் தேதி வினாத்தாள் திருத்தும் பணி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்பிறகு, அடுத்த மாதம் 21-ந் தேதியில் இருந்து எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் உள்ள 34 மாவட்டங்களில் இருக்கும் 234 மையங்களில் வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த வினாத்தாள் திருத்தும் பணிகளில் மாநிலம் முழுவதும் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

மாணவர்களுக்கு
உதவி எண் அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு முன்பாக மாணவ-மாணவிகளுக்கு ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால், அதனை பள்ளி கல்வித்துறையிடம் கேட்டு அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் உதவி மையத்தை
080-23310075 அல்லது 080-23310076 ஆகிய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டு கொள்ளலாம்.

Next Story