தாளவாடி மலைப்பகுதியில் விலை வீழ்ச்சியால் செடியிலேயே அழுகவிடப்படும் தக்காளி- குப்பையிலும் கொட்டப்படுகிறது
தாளவாடி மலைப்பகுதியில் விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யாமல் செடியிலேயே தக்காளி அழுக விடப்படுகிறது. பலர் குப்பையில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.
தாளவாடி
தாளவாடி மலைப்பகுதியில் விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யாமல் செடியிலேயே தக்காளி அழுக விடப்படுகிறது. பலர் குப்பையில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.
தக்காளி
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது தாளவாடி மலைப்பகுதி. இங்கு கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி என 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இவர்கள் கத்தரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகியவற்றை பயிர் செய்துள்ளார்கள். குறிப்பாக 100 ஏக்கர் அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளார்கள். 3 மாத பயிரான தக்காளி நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
அறுவடை கூலிக்கே கட்டாது
இந்தநிலையில் தக்காளியை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள், ஒரு கிலோ தக்காளியை 2 அல்லது 3 ரூபாய்க்கு மட்டுமே கேட்கிறார்கள். இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளார்கள்.
இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது, ‘3 மாத பயிரான தக்காளியை ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்து அறுவடை செய்யும் வரை நாற்று, களை எடுத்தல், உரம், மருந்து என ரூ.80 ஆயிரம் செலவாகும்.
கடந்த 3 மாதத்துக்கு முன் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய்க்கு விற்றது. தற்போது 2 ரூபாய்க்கு கேட்கிறார்கள். இது அறுவடை கூலிக்கு கூட கட்டாது.
பறிக்காமல் விட்டனர்
விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பலர் அறுவடை கூலிக்கு கூட பணம் இல்லாமல், தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டார்கள். அதனால் பல தோட்டங்களில் செடியிலேயே தக்காளி அழுகி விட்டன. சில விவசாயிகள் தக்காளியை பறித்து குப்பையில் கொட்டுகிறார்கள். வியாபாரிகளிடம் விலை வீழ்ச்சியை பற்றி கேட்டால், விளைச்சல் அதிகம், அதனால் விலை குறைந்துவிட்டது என்கிறார்கள். இது முறையான காரணமா?. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட கூலி வேலைக்குத்தான் செல்லவேண்டும்' என்றார்.
Related Tags :
Next Story