வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதை ஆய்வு செய்ய நிபுணர் குழு - அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதை ஆய்வு செய்ய நிபுணர் குழு - அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x
தினத்தந்தி 27 March 2022 3:49 AM IST (Updated: 27 March 2022 3:49 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு
வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். 
மருத்துவ முகாம்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். இதில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:-
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 676 குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படும். தேசிய அடையாள அட்டை பெற்றுத்தரவும், அதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிபுணர் குழு
தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் பழுதடைந்த கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கொள்கை முடிவு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஏற்கனவே ஒதுக்கீடு பெற்ற வீட்டு வசதி வாரிய குடியிருப்புதாரர்கள், அவர்களது சங்கத்துடன் பேசி வருகிறோம். முதல்கட்டமாக 6 இடங்களில் குடியிருப்போர் நலச்சங்கத்தின் உதவியுடன் வீடுகளை இடித்து கட்டிக்கொடுக்க அரசு முன்வந்து உள்ளது. இதேபோல் குடியிருப்போர் அரசிடம் கோரிக்கை வைத்தால் உதவி செய்யப்படும்.
வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும். இந்த குழுவினர் ஆய்வு செய்து கட்டிடத்தின் உறுதி தன்மையை பரிசோதனை செய்து கண்காணிப்பாளர்கள். அதில் தரமில்லை என்று தெரியவந்தால், பணிகள் நிறுத்தப்படும்.
உதவித்தொகை
அதிக பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக அரசு உயர்த்தி உள்ளது. மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். காது கேளாத குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பாடு செய்யப்படும்.
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக பணம் வசூலிப்பதாக வரும் புகார் குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
இந்த முகாமில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள் கோதை செல்வி, தலைமை ஆசிரியை சுகந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story