ரூ.4½ கோடி ஒதுக்கீடு: பெருந்துறை பழைய பஸ் நிலையம் ரோட்டை முன்மாதிரி சாலையாக மாற்ற வேண்டும்- கலெக்டருக்கு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை
பெருந்துறையில் ரூ.4½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள பழைய பஸ் நிலையம் சாலையை முன்மாதிரி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை விடுத்து உள்ளார்.
ஈரோடு
பெருந்துறையில் ரூ.4½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள பழைய பஸ் நிலையம் சாலையை முன்மாதிரி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை விடுத்து உள்ளார்.
ரூ.4½ கோடி
இதுபற்றி அவர் கூறி உள்ளதாவது:-
பெருந்துறையில், ஈரோடு -கோவை சாலையில் போலீஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, முன்னாள் அமைச்சரான எனது முயற்சியால் ரூ.4½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு இந்த சாலையை சீரமைக்க பூமி பூஜையும் போடப்பட்டது.
இந்த சாலை சீரமைப்பு பணிக்கு திட்டமிட்டபோதே இந்த சாலையை பிரதான ரோடாக விரிவுபடுத்தப்பட்டு, சாக்கடைகள் நேர்த்தியாக கட்டி, அதன் மீது கான்கிரீட் தளங்கள் போட்டு, டைல்ஸ் கற்கள் பதிக்கவும், மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல துருப்பிடிக்காத கம்பிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
முன்மாதிரி சாலை
சாலையின் நடுவில் தடுப்பு வேலி பகுதியை செடிகள் நடும் வகையில் அமைத்து, அழகிய சாலையாக, முன்மாதிரி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது இந்த பணிகள் திட்டமிட்டபடி அமைக்கப்படாமல், சாலையோர கடை வியாபாரிகள் தங்கள் கடையை விரிவாக்கம் செய்து கொள்ள வசதியாக கடைகளின் வாசல் படிகள் போன்று அமைக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும். ரூ.4½ கோடி செலவில் முன்மாதிரி சாலையாக அமைக்கப்பட வேண்டிய ரோடு மீண்டும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கும் வகையில் அமைக்கப்பட இருக்கும் அவலத்தை போக்க, ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, முன்மாதிரி சாலையை உருவாக்க உதவ வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story