குற்றாலம் பேரூராட்சி தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு


குற்றாலம் பேரூராட்சி தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 27 March 2022 5:20 AM IST (Updated: 27 March 2022 5:20 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கவுன்சிலர்கள் வராததால் குற்றாலம் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் நேற்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

தென்காசி:
தி.மு.க. கவுன்சிலர்கள் வராததால் குற்றாலம் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் நேற்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. திருவேங்கடம் பேரூராட்சி தலைவராக ம.தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
குற்றாலம் பேரூராட்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கும் தேர்தல் நடைபெற்றது. இங்குள்ள 8 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 4 வார்டுகளில் வெற்றி பெற்றன. இரு கட்சிகளும் சம பலத்தில் இருப்பதால் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது. 
தொடர்ந்து தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 
மீண்டும் ஒத்திவைப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் விடுபட்ட இடங்களுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நேற்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து குற்றாலம் பேரூராட்சி தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற இருந்தது.
காலையில் நடந்த தலைவர் தேர்தலுக்கு தென்காசி கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன் தேர்தல் அதிகாரியாக இருந்தார். தனி துணை கலெக்டர் ஷீலா, குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாணிக்கராஜ், சுகாதார அலுவலர் ராஜ கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 9.30 மணி அளவில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் தேர்தல் நடைபெறும் பேரூராட்சி மன்ற அலுவலக கூட்ட அரங்கிற்கு வந்தனர். சுமார் ½ மணி நேரம் ஆகியும் தி.மு.க. கவுன்சிலர்கள் வரவில்லை. இதனால் தேர்தல் அதிகாரி ராஜ மனோகரன், மீண்டும் இந்த தேர்தலை ஒத்திவைத்தார்.
தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு துணை தலைவர் தேர்தலுக்கும் தி.மு.க. கவுன்சிலர்கள் வரவில்லை. இதனால் அந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது. இதையொட்டி தென்காசி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிவரதன், பயிற்சி சூப்பிரண்டு கிரிஷ் யாதவ், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அச்சன்புதூர்-திருவேங்கடம்
இதேபோல் அச்சன்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் சுரேஷ்குமார், அ.தி.மு.க. ஆதரவுடன் அ.ம.மு.க. சார்பில் அயூப் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 8 வாக்குகள் பெற்று அயூப் வெற்றி பெற்று, துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
திருவேங்கடம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 6 வார்டுகளிலும், ம.தி.மு.க. 4 வார்டுகளிலும், அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா 1 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
இங்கு நேற்று நடந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் 7-வது வார்டு ம.தி.மு.க. கவுன்சிலர் பாலமுருகன், துணை தலைவர் பதவிக்கு 9-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சேர்மத்துரை ஆகியோர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைவர், துணை தலைவர் ேதர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த கட்சியினர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story