ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 March 2022 5:00 PM IST (Updated: 27 March 2022 5:00 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி பகுதியில் அதிகரித்து வரும் ரவுடிகள் அட்டகாசம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க கோரியும் பள்ளிவாசல் பஜாரில் நேற்று ஏராளமான ஆண்கள், பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பகுதியில் அதிகரித்து வரும் ரவுடிகள் அட்டகாசம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க கோரியும் பள்ளிவாசல் பஜாரில் நேற்று ஏராளமான ஆண்கள், பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்களை சமாதானம் செய்தார்.
பொதுமக்கள் சாலைமறியல்
ஆறுமுகநேரி தென்பகுதியில் உள்ள ராஜமன்யபுரம், முத்துகிருஷ்ணாபுரம், காமராஜபுரம், சீனந்தோப்பு ஆகிய நான்கு ஊர்களில் வாழும் பொதுமக்கள் ஆண்களும் பெண்களும்  ராஜமன்யபுரம் சி.எஸ்.ஐ. ஆலயம் முன்பு திரண்டனர். அங்கிருந்து பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக புறப்பட்டனர்.
சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் நண்பகல் 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆறுமுகநேரி பகுதியில் நடக்கும் கஞ்சா விற்பனை தடுக்க கோரியும், இதை கண்டு கொள்ளாத போலீசாருக்கு எதிராகவும் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்து திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் நேரில் வந்தால் தான் கோரிக்கையை தெரிவித்து, நடவடிக்கைக்கு உறுதி கூறினால் தான் மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் உறுதியாக கூறினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்தவாறு பொதுமக்கள் போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர், ரவுடிகளை கைது செய்யவும்,  ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், கஞ்சா வியாபாரத்தை அடியோடு தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு வந்தார். 
ரவுடிகள் மீது...
சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரிடம் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருந்ததாவது:- ராஜமன்யபுரம், முத்துகிருஷ்ணாபுரம், காமராஜபுரம், சீனந்தோப்பு ஆகிய பகுதிகளில் கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. ரவுடிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அவர்கள் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தொடர்புடைய ராஜமன்யபுரம் பெருமாள்சாமிகோவில் தெருவிலுள்ள 11 ரவுடிகள் தலைமையில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆறுமுகநேரி போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அந்த ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் வெளியே நடமாட முடியாத நிலை இருக்கிறது.   இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் தவறான போதை பழக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், ராஜமன்யபுரத்தில் ரவுடிகள் மளிகை கடையை உடைத்து திருடுவது, வீடுபுகுந்து தாக்கி நகை, பணத்தை பறித்து செல்வது, ஆயுதங்களால் தாக்குவது என மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான 11 பேர் மீது போலீசார் இனியாவது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு உறுதி
இதுகுறித்து கஞ்சா விற்பனையை தடுக்கவும், ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அந்த பகுதி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் 1½ மணி நேர மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 
இந்த பேச்சுவார்த்தையின் போது, திருச்செந்தூர் போலீஸ் உதவி போலீஸ் சூப்பிரண்டு, உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன்ஆகியோர் இருந்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Next Story