தூத்துக்குடியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தூத்துக்குடியில் மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்தது. இதில் திரளான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.
மினி மாரத்தான் போட்டி
தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மது அருந்துதல் மற்றும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே போட்டி தொடங்கியது. போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்றவர்கள் பாளையங்கோட்டை ரோடு, வ.உ.சி. சாலை, பீச் ரோடு வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கை அடைந்தனர். இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 900 பேர் கலந்து கொண்டனர்.
பரிசு
அங்கு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி வெற்றி பெற்ற ஆண்கள், பெண்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.1000, ஆறுதல் பரிசு 10 பேருக்கு தலா ரூ.500-ம், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கி பேசினார். அப்போது, மாரத்தான் போட்டிகளில் பங்கு பெறுவது என்பது எளிதல்ல, பங்கு பெறுவது என்பதே சிறப்பானதாகும். பின் வரும் நாட்களில் இவற்றை நினைவு கூறும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கும். இந்த மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியின் நோக்கம் மது ஒழிப்பையும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். இதன் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். உங்கள் வாழ்க்கை நல்வழியில் மாறத்தான் இந்த மாரத்தான் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், உதவி ஆணையர் (கலால்) செல்வ நாயகம், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், மாநில தடகள செயலாளர் பழனிச்சாமி, தூத்துக்குடி கோட்ட கலால் தாசில்தார் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story