ஏலகிரி மலை சாலையில் சரிந்து விழுந்த பாறைகளை அகற்றாததால் போக்குவரத்து பாதிப்பு
ஏலகிரி மலை சாலையில் மழைக்காலத்தில் சரிந்து விழுந்த பாறையை முழுவதுமாக அகற்றாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
ஜோலார்பேட்டை
ஏலகிரி மலை சாலையில் மழைக்காலத்தில் சரிந்து விழுந்த பாறையை முழுவதுமாக அகற்றாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
பாறை சரிந்து விழுந்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏலகிரி மலையில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் அவ்வப்போது அகற்றி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர்.
2-வது மற்றும் 6-வது கொண்டை ஊசி வளைவு சாலைகளில் பெரிய அளவிலான பாறை கற்கள் சரிந்து சாலையில் விழுந்ததால் ஒரு வழிப்பாதையாக இருந்து வந்தது. இதனால் பாறையை வெடிவைத்து அப்புறப்படுத்தினர். ஆனால் முழுமையாக அப்புறப்படுத்த வில்லை.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது ஊரடங்கு நடைமுறையில் இருந்து வந்ததால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இந்தநிலையில் தற்போது வாகனங்கள் அனைத்தும் மலைக்கு சென்று வருவதால் 6-வது வளைவில் மேலிருந்து கீழே வரும் வாகனங்களும், கீழே இருந்து மலைக்கு செல்லும் வாகனங்களும் பாறைகள் விழுந்த பகுதியில் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இங்கு உடைக்கப்பட்ட பாறையை முழுவதுமாக அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பாறைக்கற்களை முழுவதுமாக அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story