தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 March 2022 8:09 PM IST (Updated: 27 March 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் கருத்தப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர் அங்குள்ள காசிவிசுவநாதர் விலக்கு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் பழுதடைந்து உள்ளது என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக தற்போது அந்த பயணிகள் நிழற்கூடம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

பயணிகள் நிழற்கூடம் சேதம் 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடம் ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அதில் இருந்து பஸ் ஏறுவதற்கு பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். ஆகவே இந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
பீர்முகம்மது, வீரவநல்லூர். 

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் தேவை

ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்து சங்கநேரியில் ரேஷன் கடை ஒன்று இருந்தது. இந்த ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது. இந்த கட்டிடம் தற்போது பயன்பாட்டில் இல்லாததால் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. ஆகவே பழைய ரேஷன் கடை கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

வாகன ஓட்டிகள் அவதி 

பரப்பாடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள நாங்குநேரி-உவரி சாலையில் பள்ளங்கள் ஆபத்தான முறையில் காணப்படுகிறது. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து காயம் அடைந்து அவதிப்படுகிறார்கள். எனவே சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அருள்ராஜ் டார்வின், பரப்பாடி. 

மின்விளக்குகள் எரியுமா?

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி ரெயில்வே கேட் அருகில் இருந்து அய்யம்பிள்ளைகுளம் பகுதி வரை ஆங்காங்கே ஆபத்தான வளைவுகள் உள்ளது. இந்த வளைவு பகுதிகளில் உள்ள மின்விளக்குகள் கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த பகுதியில் மின்விளக்குகளை எரிய வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
திருக்குமரன், கடையம்.

சாய்ந்த மின்கம்பங்கள்

வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளானைக்கோட்டை விலக்கில் இருந்து பொம்மாத்தம்மன் கோவில் வரை உள்ள 3 மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்த மின்கம்பங்களை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி தார் சாலையைவிட்டு வடக்கே மாற்றி அமைக்க வேண்டுகிறேன்.
சிவபெருமாள், தாருகாபுரம்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

கடையநல்லூரில் இருந்து புதுக்குடி, கண்மணியாபுரம், வலசை, திருமலாபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக சேர்ந்தமரத்திற்கு காலை நேரத்தில் அதாவது மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பஸ்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். மாலையில் பள்ளிக்கூடம் விடும் நேரத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஆகவே மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடம் சென்று வருவதற்கு வசதியாக காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மணிகண்டன், வலசை. 

ஆபத்தான அறிவிப்பு பலகை

கீழஆம்பூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மெதுவாக செல்லவும் என்ற வாசகத்துடன் இரும்பாலான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த அறிவிப்பு பலகை சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. லேசான காற்று வீசினால் கூட சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் நலன் கருதி அந்த அறிவிப்பு பலகையை சீரமைக்க வேண்டுகிறேன்.
அம்ஜத், முதலியார்பட்டி.

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா நளன்குடி கிராமத்தில் வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகிறார்கள். இந்த பாலத்தின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. தற்போது, அந்த கம்பிகள் அனைத்தும் முறிந்து சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. எனவே மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.
இசக்கி மாதவன், நளன்குடி.

நாய்கள் தொல்லை

விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சாலையில் நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்களை நாய்கள் துரத்துகிறது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே நாய்களை பிடித்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சங்கர்கணேஷ், விளாத்திகுளம்.

Next Story