உத்தமபாளையம் கோர்ட்டில் போலி உத்தரவு ஆணை தயாரித்து ரூ.33½ லட்சம் கையாடல்; ஓய்வுபெற்ற சிரஸ்தார் உள்பட 3 பேரை போலீசார் கைது
உத்தமபாளையம் கோர்ட்டில் போலி உத்தரவு ஆணை தயாரித்து, ரூ.33½ லட்சம் கையாடல் செய்த ஓய்வுபெற்ற சிரஸ்தார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
உத்தமபாளையம் கோர்ட்டில் போலி உத்தரவு ஆணை தயாரித்து, ரூ.33½ லட்சம் கையாடல் செய்த ஓய்வுபெற்ற சிரஸ்தார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இழப்பீட்டு தொகை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 67). இவர், உத்தமபாளையம் சப்-கோட்டில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சிரஸ்தாராக பணியாற்றி வந்தார். பின்னர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். அவர் கோர்ட்டில் பணியாற்றிய கால கட்டத்தில், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்காமல் கையாடல் செய்து வந்ததாக தெரிகிறது.
மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி இழப்பீட்டு தொகையை காப்பீடு நிறுவனங்கள் கோர்ட்டில் காசோலையாக செலுத்துவது வழக்கம். அந்த காசோலைகளை பயனாளிகளின் பெயரில் தொகை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ வங்கியில் நிரந்தர வைப்பீடு செய்யப்படும்.
ரூ.33½ லட்சம் கையாடல்
ஆனால், சுகுமார் அவ்வாறு செய்யாமல், கோர்ட்டு உத்தரவு போல் போலியாக கடிதத்தை தயார் செய்து அதனை வங்கிகளுக்கு கொடுத்து, தனது மனைவி மோகனா (60), மனைவியின் தங்கை சுமதி (55) ஆகியோரின் பெயரில் வரைவோலைகளாக பெற்று பின்னர் பணமாக மாற்றியுள்ளார். அந்த வகையில் அவர் ரூ.33 லட்சத்து 55 ஆயிரத்து 209 கையாடல் செய்துள்ளார்.
கோர்ட்டில், இதுதொடர்பாக நடந்த தணிக்கையில் இந்த கையாடல் விவரம் வெளியே தெரியவந்தது. இதையடுத்து இந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், உத்தமபாளையம் சப்-கோர்ட்டு நீதிபதி கன்யாதேவி புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
3 பேர் கைது
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சுகுமார், மோகனா, சுமதி ஆகிய 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story