கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் வாட்டர் சைக்கிள் படகு சவாரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இங்குள்ள சுற்றுலா தலங்களில் நட்சத்திர ஏரிக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. இந்த ஏரியில், படகு சவாரி செய்து மகிழ்வது சுற்றுலா பயணிகளுக்கு அலாதி பிரியம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 படகு குழாமும், நகராட்சி சார்பில் ஒரு படகு குழாமும் நட்சத்திர ஏரியில் செயல்பட்டு வருகிறது.
குளு, குளு வானிலையை அனுபவித்து கொண்டே குதூகலத்துடன் இந்த எரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், வாட்டர் சைக்கிள் படகுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5 வாட்டர் படகுகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளன. இதில் ஒரு படகு மட்டும் தற்போது ஏரியில் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்த படகில் சைக்கிள் ஓட்டுவது போல் சுற்றுலா பயணிகள் பெடலை அழுத்த வேண்டும். இதில் சவாரி செய்வதற்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த படகுகளில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறுகையில், வாட்டர் சைக்கிள் படகு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. இந்த படகில் சவாரி செய்வது புதுவித அனுபவத்தை தருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். மீதமுள்ள 4 படகுகளை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story