முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு உயர் பதவிகளிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்; அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு உயர் பதவிகளிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்; அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x
தினத்தந்தி 27 March 2022 9:45 PM IST (Updated: 27 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு அனைத்து உயர் பதவிகளிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு அனைத்து உயர் பதவிகளிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

 சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலையாம்பள்ளம் ஊராட்சி சக்கரத்தாமடை கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி வரவேற்றார். 

அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு சமுதாயத்தில் சம உரிமைகளை வழங்கி அனைத்து உயர் பதவிகளிலும் பெண்கள் தடம் பதிக்கும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து உள்ளார். 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு என தனி கவனம் செலுத்தி மக்களை காத்திடும் வகையில் மருத்துவ சேவைகள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை உலகிலேயே சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலமாக உருவாக்கி உள்ளார்.

தமிழக மக்களுக்கு நோயினால் ஏற்படக்கூடிய இன்னல்களை நீக்கிடும் வகையில் நோய்கள் மக்களை தாக்காதவாறு வருமுன் காக்க வேண்டும் என்ற எண்ணத்தின் படி கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

 ஊட்டச்சத்து பெட்டகம்

இந்த  திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 18 வட்டாரங்களில் ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் 54 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 48 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. 

இதுவரையில் 35 ஆயிரத்து 816 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 590 பேர் மேல்சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். 

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மகப்பேறு பெண்களுக்கு குழந்தைகளுக்கான பராமரிப்பு பெட்டகம்,  பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை அமைச்சர் வழங்கினார். 

முகாமில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செல்வகுமார், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் தரணிவேந்தன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன்,  தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானசௌந்திரி மாரிமுத்து, வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி, தலையாம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டாள் சீத்தாராமன், துணைத்தலைவர் வீரம்மாள் காசிவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story