ஊட்டி லவ்டேல் குடியிருப்பு பகுதியில் உணவு தேடி வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை


ஊட்டி லவ்டேல் குடியிருப்பு பகுதியில் உணவு தேடி வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை
x
தினத்தந்தி 27 March 2022 9:56 PM IST (Updated: 27 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி லவ்டேல் குடியிருப்பு பகுதியில் உணவு தேடி சிறுத்தை வீட்டுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

ஊட்டி

ஊட்டி லவ்டேல் குடியிருப்பு பகுதியில் உணவு தேடி சிறுத்தை வீட்டுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். 

சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் 65 சதவீதத்திற்கும் மேல் வனப்பகுதிகளை கொண்டது. இங்கு காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. 

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைய தொடங்கி உள்ளன. இந்த நிலையில் ஊட்டி அருகே ரிச்சிங் காலனி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று புகுந்தது. 

பின்னர் அந்த சிறுத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த வளர்ப்பு நாயை கழுத்தில் தாக்கி இழுத்து சென்றது.

வீட்டுக்குள் புகுந்தது

இதனை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் லவ்டேல் பகுதியில் மலை ரெயில் தண்டவாளத் திலும் சிறுத்தை பட்டப்பகலில் நடமாடி வந்தது. 

அவர்கள் இதுகுறித்து வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்தநிலையில் அதிகாலை 2.30 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை லவ்டேல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் அது சங்கர் என்பவர் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்தது.

 பின்னர் அந்த சிறுத்தை படிக்கட்டில் ஏறி முதல் தளத்துக்கு சென்றது. 

பொதுமக்கள் பீதி

தொடர்ந்து அந்த சிறுத்தை அங்கு ஏதாவது உணவுக்காக வளர்ப்பு நாய், அல்லது ஆடு, கோழி ஏதாவது உள்ளதா என்று தேடி பார்த்ததுடன், சிறிது நேரம் வீட்டின் வாசலில் உலா வந்தது. 

பின்னர் அங்கு உணவு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து அந்த சிறுத்தை திரும்பி சென்றது. இந்த காட்சி வீட்டின் முன்பு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 

காலையில் இந்த காட்சிகளை பார்த்த வீட்டின் உரிமையாளர் உள்பட வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் இந்த தகவல் அந்த குடியிருப்பில் பரவியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், சிறுத்தை கால் தடம் பதிவாகி இருந்த இடத்தை ஆய்வு செய்து உறுதி படுத்தினர். 

அத்துடன் அவர்கள் அந்தப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, லவ்டேல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது வளர்ப்பு நாய்களை தூக்கி செல்கிறது. 

இதனால் நாங்கள் அச்சமடைந்து உள்ளோம். இதனால் இரவு நேரத்தில் வெளியே வராமல் இருக்கிறோம். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story