வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் திருவிழா பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வலங்கைமான்:-
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மகாமாரியம்மன் கோவில்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் பிரசித்திப்பெற்ற சக்தி தலங்களுள் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
திருவிழாவின்போது பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து விநோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமாக வேண்டும் என மகா மாரியம்மனிடம் வேண்டிக்கொள்வர். நோயில் இருந்து குணமாகி வேண்டுதல் நிறைவேறியவர்கள் பாடை மீது இறந்தவர்கள் போல் படுத்துக்கொள்வார்கள். அப்போது இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளும் செய்யப்படும்.
பாடைக்காவடி திருவிழா
அதன் பின்னர் அந்த பாடைக்காவடியை கோவில் அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து 4 பேர் தூக்கிக்கொண்டு மகா மாரியம்மன் கோவிலை 3 முறை வலம் வருவார்கள். இவ்வாறு பாடை மீது படுத்து கோவிலை வலம் வருவது, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கிய அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக அமைகிறது.
இந்த ஆண்டுக்கான பாடைக்காவடி திருவிழா கடந்த 11-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 13-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 20-ந் தேதி 2-ம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அதைத்தொடர்ந்து விழா நாட்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. பிரதான நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.
நேர்த்திக்கடன்
விழாவில் ஏராளமான பக்தர்கள் பாடை மீது படுத்து கோவிலை வலம் வந்து ‘பாடைக்காவடி’ நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் பால்குடம் எடுத்தும், பறவைக்காவடி, செடில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றனர். நேற்று கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி கோவில் கருவறையில் வீற்றிருக்கும் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா
இதையடுத்து பாடைக்கட்டி மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக வலங்கைமான் அருகே உள்ள விசலூர் கிராமத்தில் இருந்து கரகம் புறப்பாடுடன் செம்மறி ஆடு கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவில் எதிர்புறம் உள்ள செடில் மரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட செம்மறி ஆட்டை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகா மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
பலத்த பாதுகாப்பு
திருவிழாவையொட்டி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி கூடுதல் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 11 இன்ஸ்பெக்டர்கள், 25 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன், செயல் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன் தலைமையில் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story