தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடைகளுக்கு சீல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்:
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளாஸ்டிக் பொருட்கள்
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை தமிழக அரசு, வெளியிட்டுள்ளது. இதன்படி பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள் போன்றவற்றை தயாரிக்கவும், சேமித்து வைத்து விற்கவும், பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு அறிவித்துள்ள தடையாணையினை முழுமையாக செயல்படுத்திடும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும், பயன்படுத்தும் மற்றும் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல் வைக்கப்படும்.
இது தொடர்பாக ஏற்கனவே பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்று வருகிறது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறு வணிக நிறுவனம் மற்றும் பொது மக்களை கேட்டு கொள்கிறேன். இந்த தடையாணையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story