புதுப்பட்டி, கூத்தகுடியில் மீன்பிடி திருவிழா திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் பிடித்தனர்
புதுப்பட்டி, கூத்தகுடியில் மீன் பிடி திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் பிடித்தனர்.
பொன்னமராவதி:
மீன்பிடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் புதுப்பட்டியில் உள்ள வில்லியநத்தான் கண்மாய் மற்றும் ஓவியன் கண்மாயில் விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு கரை மேல் உள்ள மடையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தேங்காய் உடைத்து பூஜை செய்தனர்.
பின்னர் ஊர் முதியவர்கள் வெள்ளை துண்டு வீசிய பின்பு சுற்றுவட்டார பகுதி கிராமமான ஆலவயல், அம்மன்குறிச்சி, கேசராபட்டி, வலையப்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர், பிடாரம்பட்டி, கொப்பனாப்பட்டி, கொன்னையூர், நாத்துப்பட்டி, தூத்தூர் மனப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்றிணைந்து மீன்பிடிக்க குளத்தில் இறங்கினர். இதில் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவை பயன்படுத்தி மீன் பிடித்தனர். இதில் ஜிலேபி, அயிரை, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் பொதுமக்கள் பிடித்து சென்றனர்.
கூத்தகுடி
விராலிமலை தாலுகா கூத்தகுடியில் உள்ள குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கூத்தகுடி கிராம சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலையிலேயே குளத்திற்கு வந்தனர். இதனையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து குளத்தின் கரையில் தயாராக நின்ற பொதுமக்கள் வலை, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினர். இதில் விரால், அயிரை, கெழுத்தி, வளனகெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராமமக்கள் பிடித்து சென்றனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story