துணைத்தலைவர், கவுன்சிலர்கள் மீது வழக்கு
தேர்தல் அதிகாரி புகாரினை தொடர்ந்து நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருமங்கலம்,
தேர்தல் அதிகாரி புகாரினை தொடர்ந்து நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேர்தல்
திருமங்கலம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் ரம்யாவும், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் நகர்மன்ற தலைவர் உமா விஜயனும் போட்டி யிட்டனர். தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் அதிகாரி அனிதா முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் அ.தி.மு.க.விற்கு வாக்களித்ததாக கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டு வாக்குச்சீட்டுகளை கிழித்து எறிந்தனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
பதற்றம்
மேலும் தி.மு.க. நிர்வாகிகள் நகராட்சி அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் உத்தரவின்பேரில் போலீசார் குவிக்கப்பட்டு மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். அதன் பின்னர் வாக்குச்சீட்டில் 6 வாக்குச்சீட்டுகள் மட்டும் கிழிக்கப்பட்டதால் மீதம் உள்ள 21 வாக்குச்சீட்டுகளை எண்ணியதில் தி.மு.க. வேட்பாளர் 15 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் 6 வாக்குகளும் பெற்றனர்.
அதிக வாக்குகள் பெற்ற ரம்யா வெற்றி பெற்றதாக அறிவித்த நிலையில் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உமா விஜயன் கூறியதாவது:- அ.தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்த ஆத்திரத்தில் தி.மு.க. கவுன் சிலர்கள் வாக்குச் சீட்டை கிழித்து எரிந்தனர். இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறி தன்னை வெளியேற்றி விட்டு தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதனால் உண்மையான வெற்றி மறைக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நகர்மன்ற மறைமுகத் தேர்தலில் வாக்குச்சீட்டுகளை கிழித்து எறிந்து அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தேர்தல் அதிகாரி அனிதா அளித்த புகாரின் அடிப்படையில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதவன், 5-வது வார்டு கவுன்சிலர் திருக்குமார், 7-வது வார்டு கவுன்சிலர் சின்னச்சாமி ஆகிய 3 பேர் மீதும் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story