ஆன்லைனில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.82 ஆயிரம் மோசடி
ஆன்லைனில் உடனடியாக பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.82 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை,
ஆன்லைனில் உடனடியாக பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.82 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் இரட்டிப்பு தருவதாக...
காரைக்குடி அழகப்பாபுரம் விநாயக தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. (வயது 24).என்ஜினீயர். கடந்த 24-ந்தேதி இவருடைய செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு லிங்க்-ஐ அனுப்பி இதில் பணம் செலுத்தினால் உடனடியாக இரட்டிப்பாக்கி தருவதாக கூறப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த ராமமூர்த்தி சோதனைக்காக ரூ.100-ஐ முதலில் அனுப்பியுள்ளார். இந்தத் தொகை அனுப்பப்பட்ட சிறிது நேரத்தில் அந்த லிங்கில் அவருடைய கணக்கில் ரூ.200 இருப்பதாக காட்டி உள்ளது.இதை தொடர்ந்து அவர் ரூ.500, ரூ.1000, ரூ.10 ஆயிரம் என்று 16 தடவைகளில் ரூ.82 ஆயிரத்து 400-ஐ செலுத்தியுள்ளார். அப்போது லிங்கில் அவரது கணக்கில் ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் இருப்பதாக காட்டி உள்ளது.
மோசடி
இதைத்தொடர்ந்து அவர் அந்த லிங்கில் உள்ள பணத்தை எடுக்க முயன்றார். அதில் எடுக்க முடியவில்லை. மேலும் பணம் போடும்படி தகவல் வந்ததாம். இதனால் சந்தேகமடைந்த ராமமூர்த்தி தொடர்ந்து பணத்தை போடாமல் தான் ஏற்கனவே செலுத்திய பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லையாம்.
இது குறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி, ஏட்டுக்கள் ஸ்ரீதர், வினோத்குமார் ஆகியோர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story