கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்


கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 March 2022 12:33 AM IST (Updated: 28 March 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் தாழங்குடா கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலூர்,

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி எனும் பேரலை தாக்கியதற்கு பிறகு, கடலூர் மாவட்ட கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நீரோட்டத்தில் மாற்றம், அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடற்கரையோரம் கருங்கல் கொட்டி, மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரையோரம் கருங்கல் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக தென்பெண்ணையாறு முகத்துவாரம் முதல் தாழங்குடா கிராமம் வரை கடற்கரையோரம் கருங்கல் கொட்டப்பட்டது. அதன்பிறகு அந்த திட்டம் திடீரென கைவிடப்பட்டது.

தடுப்பு சுவர் கட்டும் பணி

இந்நிலையில் மீண்டும் மீன்வளத்துறை சார்பில் தாழங்குடா கடற்கரையில் மண் அரிப்பை தடுக்க 7 இடங்களில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர், 50 மீட்டர், 20 மீட்டர் தூரம் வரை கருங்கல் கொட்டி தடுப்பு சுவர் கட்ட திட்டம் வகுக்கப்பட்டது. இது தவிர மீன் விற்பனைக்கூடம், மீன் உலர் தளம், மீன் இறங்கு தளம், சாலை வசதி அமைக்க ரூ.13 கோடியே 6 லட்சம் செலவில் திட்டம் தொடங்கியது.
அதன்படி தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த திட்டம் முடியும் தருவாயில் மண் அரிப்பு தடுப்பது நிறுத்தப்படும். மீனவர்களும் தடையின்றி கடலுக்குள் சென்று மீன்பிடித்து வர முடியும் என்று மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story