கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக சமாதான கூட்டம்
ஏழாயிரம்பண்ணை அருகே கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக சமாதான கூட்டம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடுவது சம்பந்தமாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சாமி கும்பிட்டு வந்தனர். ஒரு சமுதாயத்திற்கு அனுமதி மறுத்ததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அனைத்து சமுதாயத்தினரும் சாமி கும்பிடலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆதலால் அனுமதி பெற்ற சமுதாயத்தினர் சாமி கும்பிடுவதற்கு மற்ற சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதால் நேற்று சமாதானக்கூட்டம் ராமநாதபுரம் கிராமத்தில் நடைபெற்றது. வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன் தலைமையில் கூட்டம் நடந்தது. சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், கூடுதல் சூப்பிரண்டு மணிவண்ணன், ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கோவிலுக்கு வந்தார். வருகிற 1-ந் தேதி சாத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படுவதாக கூறியதன் பேரில் இரு தரப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டனர். பின்னர் கோர்ட்டு உத்தரவில் அனுமதி பெற்ற சமூகத்தினர் மூடப்பட்டு இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு முன்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சமாதான கூட்டத்தையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story