மது அருந்திவிட்டு வந்து தாயை கொடுமைப்படுத்தியதால் தொழிலாளியை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற மகள்
மது அருந்திவிட்டு வந்து தாயை கொடுமைப்படுத்தியதால் தொழிலாளியை மகளே உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் உன்சூரில் நடந்துள்ளது
மைசூரு: மது அருந்திவிட்டு வந்து தாயை கொடுமைப்படுத்தியதால் தொழிலாளியை மகளே உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் உன்சூரில் நடந்துள்ளது.
தகராறு
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா சீகட்டிகட்டே கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 50). கூலி தொழிலாளி. இவருடைய மகள் சுனிதா (20). தேவராஜ் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனால் மது அருந்திவிட்டு தாயுடன் தகராறு செய்ய வேண்டாம் என்று தேவராஜை அவருடைய மகள் சுனிதா கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அடித்துக் கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் தேவராஜ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதனை சுனிதா கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் தொடர்ந்து தனது மனைவியை அடித்து, உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுனிதா, வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து தேவராஜை சரமாரியாக தாக்கினார்.
மேலும் அவருடைய தலையிலும் ஓங்கி அடித்துள்ளார். இதில் தேவராஜின் மண்டை உடைத்து ரத்தம் கொட்டியது. இதனால் மயங்கி விழுந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மகள் கைது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உன்சூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான தேவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தினமும் மது அருந்திவிட்டு வந்து தாயுடன் தகராறு செய்ததால் சுனிதாவே தந்தையை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிதாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story