லாரி மோதி 10 வயது சிறுவன் பலி; உறவினர்கள் லாரிக்கு தீ வைப்பு
கலபுரகியில் லாரி மோதி 10 வயது சிறுவன் உயிரிழந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் லாரிக்கு தீ வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
கலபுரகி: கலபுரகியில் லாரி மோதி 10 வயது சிறுவன் உயிரிழந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் லாரிக்கு தீ வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுவன் சாவு
கலபுரகி டவுன் ஹிராராபூர் கிராமத்தை சேர்ந்தவன் மனீஷ் மல்லிகார்ஜூன் (வயது 10). இந்த சிறுவன் கிராமத்தில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் விளையாடிவிட்டு மனீஷ் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தான். அப்போது அவன் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றான்.
இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக வேகமாக வந்த லாரி, மனீஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார். விபத்தில் மனீஷ் இறந்தது பற்றி அறிந்ததும் அவனது பெற்றோரும், உறவினர்களும் அங்கு விரைந்து வந்தனர்.
லாரிக்கு தீ வைப்பு
அங்கு இறந்து கிடந்த மனீசின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிலர் மனீசின் உயிரை காவு வாங்கிய லாரியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் லாரி பற்றி எரிந்தது. இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த தீயணைப்பு படையினர் லாரி மீது பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
மேலும் அங்கு வந்த போலீசாரும் மனீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கலபுரகி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story