பெட்ரோல், டீசல் விலை ரூ.3.50 அதிகரிப்பு


பெட்ரோல், டீசல் விலை ரூ.3.50 அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 March 2022 3:11 AM IST (Updated: 28 March 2022 3:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கடந்த 6 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.

திருச்சி
இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் ஒரே நிலையில் நீடித்தது. ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர், கச்சா விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.
அதன்படி 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22-ந்தேதி பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா 76 காசு உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 23-ந்தேதி 76 காசு உயர்த்தப்பட்டது. பின்னர் 25-ந்தேதி 75 காசு, நேற்று முன்தினம் 75 காசு என அடுத்தடுத்து பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே சென்றது. டீசல் விலை 25-ந் தேதி 76 காசு, நேற்று முன்தினம் 76 காசு உயர்த்தப்பட்டது.
5-வது முறை உயர்வு
இந்தநிலையில் நடப்பு வாரத்தில் 5-வது முறையாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி திருச்சியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 48 காசு உயர்ந்து ரூ.105.32 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் 52 காசு உயர்த்தப்பட்டு ரூ.95.45 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 6 நாட்களில் மட்டும் 5 முறை விலை உயர்த்தப்பட்டது. இதில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.3.56-ம் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.105-க்கு மேலும், டீசல் விலை ரூ.95-க்கு மேலாகவும் விற்பனை செய்யப்பட்டது.
வாடகையை உயர்த்த முடிவு
இதேநிலை நீடித்தால் விரைவில் பெட்ரோல் ரூ.110 ஆகவும், டீசல் விலை ரூ.100 ஆகவும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வால், கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிவரும் ஏழை, நடுத்தர பொதுமக்கள், தற்போது பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதைகண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால், பெட்ரோல், டீசலை நம்பியுள்ள வாடகை கார், ஆட்டோ மற்றும் வேன், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களை நம்பி தொழில் நடத்தி வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், டீசல் விலை உயர்வால் வாடகையை உயர்த்தவும் லாரி உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:-
இக்கட்டான நிலை
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு தங்களுக்கு தொடர்பில்லை என்று கூறி வருகிறது. ஆனால், 5 மாநில தேர்தல் நடந்ததால், கடந்த 4½ மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. தற்போது அங்கு தேர்தல் முடிந்ததும் விலை உயர்ந்து வருகிறது.
ஏற்கனவே, போதுமான வருவாய் இல்லாததால் லாரி வாடகையை உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்த வாரத்தில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் சென்னையில் நடக்கிறது. அப்போது, லாரி வாடகை உயர்வு குறித்து முடிவு செய்ய இருக்கிறோம். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story