தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி பசு மாடு- கன்றுக்குட்டி சாவு; விவசாயிகள் பீதி
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி இறந்தது. இதனால் விவசாயிகள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
தாளவாடி
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி இறந்தது. இதனால் விவசாயிகள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
10 வனச்சரகங்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
விவசாயி
தாளவாடியை அடுத்த சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த சித்தராஜ் (வயது 48).விவசாயி. இவர் 6 மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் இவர் தனது மாட்ைட தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் மாலையில் மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை வீட்டுக்கு ஓட்டிவருவதற்காக சென்றார். அப்போது தோட்டத்தில் பசு மாடு ஒன்றும், அதன் கன்றுக்குட்டியும் கழுத்து பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சிறுத்தை தாக்கி சாவு
தகவல் அறிந்ததும், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பசு மாட்டையும், கன்றுக்குட்டியையும் பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கால் தடம் சிறுத்தையின் கால் தடம் என்பதை கண்டுபிடித்தனர்.
தோட்டத்துக்குள் புகுந்து மாடு மற்றும் அதன் கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் சிறுத்தை ஒன்று பதுங்கி கொண்டது குறிப்பிடத்தக்கது. எனவே சேசன் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story