அரசு பள்ளி வளாகத்தில் கழிவுநீர் புகுவதால் சுகாதார சீர்கேடு
அரசு பள்ளி வளாகத்தில் கழிவுநீர் புகுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
தா.பழூர்:
துர்நாற்றம்
தா.பழூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தையொட்டிய பகுதியில் தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் சேமிக்கப்படும் நீரை அப்பகுதியில் கடை வைத்துள்ள சில வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி வளாக சுற்றுச்சுவரையொட்டிய பகுதிகளில் சாலையோர காய்கறி கடைகள், பூக்கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு சிறு, சிறு கடைகள் அமைந்துள்ளன. காய்கறி மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகள் பள்ளி வளாகத்தையொட்டிய பகுதியிலேயே வீசப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வியாபாரிகள் பயன்படுத்தும் நீர் அப்பகுதியில் வழிந்தோடி சாக்கடையாக மாறி விடுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் விரையம் செய்யப்படும் நீர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
மாணவ, மாணவிகள் பாதிப்பு
இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர். பள்ளி வளாகத்தை சுற்றி பல்வேறு நோய் தொற்று ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகி, பள்ளி நேரங்களில் மாணவர்களை கடிப்பதால் மாணவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்து இருக்கின்றனர். ஆனாலும் வெளிப்புறத்தில் இருந்து பள்ளி வளாகத்திற்குள் கழிவுநீர் புகுவதால் இத்தகைய நிலை ஏற்படுகிறது.
எனவே அதனை தடுக்க உரிய அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தையொட்டி இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை கொட்ட தடை விதிக்க வேண்டும் என்றும், சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் கடைகளை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story