மேகதாது அணை பிரச்சினைக்கு தீர்வு காண ஏப்ரல் முதல் வாரத்தில், பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்


மேகதாது அணை பிரச்சினைக்கு தீர்வு காண ஏப்ரல் முதல் வாரத்தில், பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்
x
தினத்தந்தி 28 March 2022 3:48 AM IST (Updated: 28 March 2022 3:48 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை பிரச்சினைக்கு தீர்வு காண ஏப்ரல் முதல் வாரத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும், அங்கு மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்

பெங்களூரு: மேகதாது அணை பிரச்சினைக்கு தீர்வு காண ஏப்ரல் முதல் வாரத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும், அங்கு மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கூறினார்.

கர்நாடக அரசு திட்டம்

தலக்காவிரியில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. இந்த காவிரி ஆறு கர்நாடகம், தமிழகம் உள்பட 4 மாநில மக்களின் தண்ணீர் தேவையை தீர்த்து வரும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இதற்கிடையே கர்நாடகம், தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பெரும் பிரச்சினை இருந்து வருகிறது. இதுதவிர காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சட்டசபையில் தீர்மானம்

இந்த நிலையில் கர்நாடக அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த தென்மாநிலங்கள் மாநாட்டில் மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், மேகதாது பிரச்சினையில் சுமுக தீர்வு காண கர்நாடகமும், தமிழகமும் அமர்ந்து பேச தயார் என்றால் அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று கூறினார்.
  
இதையடுத்து தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக அரசும் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. மேலும் மேகதாது உள்பட கர்நாடகத்தில் உள்ள நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் தொடர்பாக அடுத்தக்கட்ட முடிவு எடுப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

அனைத்துக்கட்சி குழு

அதில் மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்க மத்திய அரசை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்று முக்கிய தலைவர்களை சந்திக்கவும், அந்த முயற்சி கைகூடவில்லை என்றால் கர்நாடகம் சார்பில் அனைத்துக்கட்சி குழு டெல்லி சென்று மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற முயற்சிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
  
இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தொழில் வளர்ச்சி

மேகதாது அணை திட்டம் உள்பட மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண அரசு முயற்சி செய்து வருகிறது. இதில் சட்ட சிக்கல்கள் எழுந்துள்ளதால் கோர்ட்டு மூலம் தீர்க்க வேண்டியுள்ளது. இந்த நதிநீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து விவாதிக்கவும், ஆலோசனை நடத்தவும் நான் ஏப்ரல் முதல் வாரத்தில் டெல்லி செல்கிறேன். அங்கு மத்திய ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். ரெயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படும். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதால் கர்நாடகம் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது.
  
கர்நாடகத்தை ஒரு திட்டமிட்ட மாநிலமாக மாற்றுவதற்கான வலுவான அடித்தளம் போடப்படும். பட்ஜெட்டில் அறிவித்துள்ளது போல் தொழில்துறைக்கு அதிக ஊக்கம் தரப்படும். முதலீடுகளை ஈர்க்க நிலத்தை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பிற பணிகள் நடைபெற்று வருகிறது. வட கர்நாடகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி
  
பெண்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துதல், விவசாயத்துறையின் 2-வது இயக்குனரகம் அமைத்தல், உப்பள்ளியில் ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆஸ்பத்திரி அமைக்க நிலத்தை அடையாளம் காணும்படி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதேபோல் பெலகாவியில் கித்வாய் புற்றுநோய் ஆஸ்பத்திரியும் அமைக்கப்படும்.
  
கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களுக்கும் பணி ஆணை வருகிற ஏப்ரல் மாத இறுதிக்குள் பிறப்பிக்கப்படும். கல்யாண-கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு ஏற்கனவே ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story